Monday, December 12, 2011

குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???


ஏண்டா இன்னைக்கு ஊருக்கு கிளம்பினோம் என்று அந்த பேருந்து நிலையக்கூட்டத்தை பார்த்தவுடன் தலையில் அடித்துக்கொண்டான்  கபிலன்.எல்லாரும் அப்படி எங்கதான் போறாங்க என ஒவ்வொருத்தரையும் நிறுத்திக்கேட்க துடித்தான்.திருப்பி அதே கேள்வி அவனிடம் யாராவது கேட்டால்.?அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு வரப்போகும் பேருந்துக்காக காத்திருந்தான்.


பேருந்துக்கட்டணம் ஏத்தியதும் புலம்பித்தள்ளியவர்கள் இப்ப சகஜமாகி பயணத்தை தொடர்வது வியப்பைத்தந்தாலும், நம்மால் என்ன செய்யமுடியும் என்ற மக்களின் ஆதங்கம் கண் முன்னே விரிந்தது.இப்படித்தான் போராட எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் ஒரு சிலர் தான் போராடவும் குரல் கொடுக்கவும் செய்கிறார்கள்.மக்களைப்பொருத்தவரை அவர்களுக்கெல்லாம் நேரமிருக்கிறது நமக்கெல்லாம் வேலையிருக்கிறது என்ற எண்ணம்.

                  
மனதுக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்க சட்டென்று எல்லோரும் பரபரப்பானார்கள்.ஆமாம் பேருந்துதான் வந்தது.இடம் பிடிக்க என்னென்ன தகிடுதத்தம் செய்ய முடியுமோ எல்லாம் நிகழ்ந்தது.பயிற்சியில்லாத நான் தோற்றுப்போனேன்.சரி யாராவது ஒருத்தர் தனி ஆளா சீட்டு போட்டிருப்பார் என நினைத்து பஸ்சுக்குள் நுழைந்து துழாவினேன்.ரெண்டு ஆள் சீட் ஒன்றில் ஒரு துண்டு கிடந்தது.சரி இதில் உக்காந்துக்குவோம் ஒருத்தரா இருந்தா நம்ம அதிர்ஷ்டம் இல்லேன்னா இறங்கி அடுத்த வண்டியப்பாப்போம்னு அந்த சீட்டில் அமர்ந்தேன்.
              

கூட்டத்தில் ஒருத்தரு என்னைப்பாத்துக்கிட்டே வந்தாரு.அவரு மட்டும் இந்த சீட் போட்டவரா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுக்கிட்டேன்.ஏன்னா அவர பாத்தவுடனே தெரிஞ்சுது நல்லா குடிசிருக்காருன்னு,அதுக்குள்ளே பஸ் வேற கிளம்பிடுச்சு,எதிர்பார்த்த(பார்க்காத)மாதிரியே அவருதான் என் பக்கத்தில வந்து ஒக்காந்தாரு.எந்த ஊரு தம்பி?என்றார்.எனக்கு அடிக்காமலே போதை ஏறியது.ஊரை சொன்னேன்.அட எனக்கும் பக்கத்து ஊர்தான் என ஆரமித்து பேச இல்லை உளற ஆரம்பித்தார்.நடுவில் கண்டக்டரிடம் இருபது ரூபாய் கொடுத்து விட்டு நூறு ரூபாய் என பஞ்சாயத்து வேறு.என்னை என்ன குடிசிருக்கேன் ன்னு ஏமாத்தப்பாக்குறியா?இல்ல என்கிட்டே காசு இருக்காதுன்னு நெனைக்கறியா என டவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு நூறு ரூபா கட்டு எடுத்து ஆட்டிக்கொண்டே பாத்தியா?ன்னார்.நான் ஜன்னலோரம் திரும்ப கண்டக்டர் என்னைய கோத்துவிட்டார் .வேண்ணா அவரையே கேட்டுப்பாரு அப்படின்னார்.ஏந்தம்பி நான் எவ்வளவு கொடுத்தேன் நீங்க சொல்லுங்க நான் கேக்குறேன் வேற எவன் சொன்னாலும் கேக்க மாட்டேன்.நான் இருவது ரூவாதாங்க கொடுத்தீங்கன்னேன்.இந்த படிச்ச புள்ள சொல்றதால விடறேன்.யாரையும் ஏமாத்தக்கூடாது தெரியுதா?நீங்களாவது சொல்றீங்கலேன்னு மனசுக்குள் சந்தோசம் பின்னே கம்பெனியில நீயெல்லாம் என்னத்த படிச்சுட்டு வந்தேன்னு கேக்குராங்களே?

                    

பஞ்சாயத்து முடித்து உக்கார்ந்தவர் பணத்தை மேல்பாக்கேட்டில் வைத்தார்.அது வெளியே துருத்திக்கொண்டு இருந்தது.செல்போனை எடுத்து பேச ஆரமித்தார்,அவரது மனைவி போலிருக்கிறது,குடித்திருப்பதை கண்டிபிடித்து திட்டுவதும் இவர் கெஞ்சுவதும் அவரது பேச்சில் தெரிந்தது.பேசி முடித்து செல்போனையும் சட்டைப்பாக்கேட்டிலே வைத்தார் ஏற்கனவே பணம் துருத்திக்கொண்டிருக்க இப்போ பணமும் செல்போனும் கீழே விழும்படி இருந்தது.சொல்லலாமா வேணாமா என மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தி.ஏங்க பணம் விழப்போகுதுன்னு சொன்னேன்.ம்ம்ம்என்னதான் தன்னியடிசாலும் நான் ஸ்டடியா இருப்பேன் ன்னார்.இதுக்குதான் யோசிச்சேன்.சரி நமக்கென்னன்னு மேலே பேசுவதை தவிர்த்து ஜன்னலோரமாய் பார்வையை திருப்பிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன்.அவர் தூங்கி தூங்கி மேலே விழுந்தவண்ணம் இருந்தார்.
பணத்தையும் கவனித்தபாடில்லை.நல்ல வேளையாக எனது ஊர் வந்தது.அப்பாடா என இறங்கிக்கொண்டேன்.


ரெண்டுஊர் தள்ளி கண்டக்டர் தூங்கிக்கொண்டிருந்தவரின் தோளைதட்டி யோவ ஊர் வந்துடுச்சுய்யா!எறங்குன்னு அதட்ட அரக்கப்பரக்க இறங்கினார்.எறங்குகையில் பாக்கெட்டைத்தொட்டவர் அதிர்ந்து அய்யய்யோ என் பணத்தையும் போனையும் காணோம் என அலறினார்!பாக்கேட்டுலதான் வைச்சிருந்தேன் எங்க போச்சுன்னு தெரியலையே,அதை வைச்சுத்தான இந்த மாசம் வூட்டுல பொழப்பு நடத்தணும்னு தெளிந்து புலம்பினார்.யோவ பணத்த வைச்சுக்கிட்டு ஒழுங்கா வராம இப்படி போதைய போட்டுக்கிட்டு வந்தா இப்படிதான்யா நடக்கும்.பக்கத்துல யாரு இருந்தா தெரியுமா?தெரியல்லையா பக்கத்து ஊர் தம்பி பாத்தா படிச்ச புள்ளை மாதிரி இருந்தது.பக்கத்து ஊரும இருக்கிறது ஏன்யா இப்பல்லாம் திருடன்லாம் படிச்சவன் மாதிரித்தான்யா வேசம் போடுறான்.நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும் பொ இப்ப புலம்பி என்ன பண்றது எறங்கு டைம் ஆகுதுன்னு எறக்கிவிட்டுட்டு பஸ் புறப்பட்டது.

                     
 ஐயோ புள்ளைக்கு ஸ்கூலுக்கு,வீட்டுக்கு சாப்பாடுக்கு எல்லாத்துக்கும் வைச்சிருந்த பணம் இப்படிபோச்சே ன்னு கதறினான்.புலம்பியபடி வீட்டைநோக்கி நடையைகட்டினான்.வீட்டுக்குப்போனவுடன் பொண்டாட்டியையும்,குழந்தையும் பார்த்தவுடன் அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.பணமெல்லாம் போச்சுடி கண்ணு,இந்த பாழாப் போன குடியால எல்லாம் போச்சுடி ன்னு புலம்ப ஆரம்மித்தான்.சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்டி நம்ம புள்ளை மேல சத்தியம்.


                   
இனி நடந்தது........
அடுத்தநாள் காலை அவனது மனைவியின் செல்போன் அடித்தது.பேசியது கபிலன் தான்.ஊர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக கூறி தான் தான் பணத்தையும் செல்போனையும் எடுத்த்துச்சென்றதாய் கூறி வந்து வாங்கிக்கொல்லுமாறு கூறினான்.போய் பணத்தை வாங்கிக்கொண்டு ஐயா சாமி என் கண்ணை தொறந்துட்டய்யா இனிமே வாழ்க்கையில குடிப்பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்னு சொன்னான்.
கபிலன் மனதுக்குள் குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு பழமொழி நினைவுக்கு வந்தாலும் ஒரு மனநிறைவுடன் பேருந்துக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.



34 comments:

கோகுல் said... Reply to comment

ஒரு சிறுகதை முயற்சியாக எழுதியுள்ளேன்.உங்கள் விமர்சனத்தை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

பலபேர் குடும்பங்களில் இப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கிறது.

பணத்தை தொலத்தபிறகு திருந்திவிடுவார்கள். ஆனால் மீண்டும் பணத்தை பார்த்தவுடன் வேதாளம் முருங்கை மரம் ஏறின மாதிரி மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள்...


நல்லதொரு அனுபவப்பதிவு

Mathuran said... Reply to comment

நல்லதொரு சிறுகதை..
ஒரு கதைக்குள்ளேயே குடிகாரர்களால் சமூகத்தவரும் அவரது குடும்பத்தவரும் அனுபவிக்கும் அவஸ்தைஅய் நகச்சுவை உணர்வோடு சொல்லியுள்ளீர்கள்..

மக்களின் அன்றாட பிரச்சினைகளை கதைக்குள் இழுத்துவந்தது சிறப்பு

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

சிறுகதை சூப்பரா இருக்கு கபிலன் ச்சே கோகுல்...!!!

சம்பத்குமார் said... Reply to comment

சிறுகதை பல உண்மைகளை உணர்த்துகிறது நண்பரே..

இதுல இன்னொரு விஷயம் குடிகாரர்கள் பெரும்பாலும் மற்ற நேரத்தில் கஞ்சராக இருந்தாலும் போதை ஏறிட்டபிறகு காசு பஞ்சாபறக்கும்..
அதுலயும் பேச்சு சும்மா ஆங்கிலத்தில பிச்சு உதறுவாங்க..

ஆனால் காலைல பார்த்தா நெத்தி நிறைய விபூதி பட்டைய போட்டுக்கிட்டு ஆள் சும்மா ஜம்முன்னு இருப்பாங்க..

என்னத்த சொல்ல..அவங்க அவங்களா திருந்தினா சரிதான்..

சம்பத்குமார் said... Reply to comment

கதை நல்லா இருக்கு நண்பா..

Unknown said... Reply to comment

கதையில் ஓவராய் நோண்டக் கூடாது.
நன்றாக இருக்கிறது. நீங்கள் பின்னூட்டம் இடக் கேட்டிருப்பதால் என் மூக்கை நுழைக்கிறேன்.

இந்தக் கதையில், இடையில் கபிலனுக்கும் - கதையின் ஆசிரியர் கோகுலுக்கும் வித்தியாசம் தெரியலை.

- "அடித்துக்கொண்டான் கபிலன்." "பேருந்துக்காக காத்திருந்தான்."
இது போல எழுதிக்கொண்டு வந்த நீங்கள், திடீரென
"கூட்டத்தில் ஒருத்தரு என்னைப்பாத்துக்கிட்டே வந்தாரு.அவரு மட்டும்"

பிறகு மீண்டும்,
கபிலன் தான்.ஊர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக கூறி தான் தான் பணத்தையும் செல்போனையும் எடுத்த்துச்சென்றதாய் கூறி வந்து வாங்கிக்கொல்லுமாறு கூறினான்

ஒரு கதையில், இதுபோன்று மொழிக் கூறுகளை மனதில் வைத்துக் கொண்டால் படிப்பவருக்கு எந்த வித சிரமும் இருக்காது.
நீங்கள் விவரிக்கிற கதையிலேயே கபிலனின் மனதுக்குள் ஓடுகிற எண்ணம் தனித்துக் காட்ட முடியும்.
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்.

"குடியைத் திருட்டால் ஒழிக்க முடியுமானால் மகிழ்ச்சியே."

Vinodh Thangavel said... Reply to comment

Story is nice and message ful. Story is like Kapilan's self narrating, but even he is got down from the bus story is continuing that things that he doesnt know... there i feel some logic missing.. rest that story is fine..Also try to use the place names and the same area Colloquial Tamil... Keep rock Gokul.. :-)

சக்தி கல்வி மையம் said... Reply to comment

இன்றும் பல குடும்பங்களில் நடப்பதை கதையாக்கி உள்ளீர்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

M.R said... Reply to comment

யதார்த்தமான கதை அருமை ,கூடவே விழிப்புணர்வு கூட ...


த.ம 5

மற்றவையும்

Unknown said... Reply to comment

கோகுல்! முதல்ல காதல் கதை எழுதுங்க! அப்பத்தான் நல்லா கதை விட பழகலாம்! த.ம 7!

அனுஷ்யா said... Reply to comment

ஒரு நிறைவான சிறுகதை...சில வரிகள் உண்மையில் அசத்தல்
எ.கா: எனக்கு அடிக்காமலே போதை ஏறியது.

சில வாரங்கள் எழுதாமல் விடுத்த சிறுகதைகள் மீண்டும் எழுத தூண்டிவிட்டீர்கள் ...மரண அறிவிப்பு---.இது நான் எழுதியவையில் எனக்கு பிடித்த சிறுகதை..நேரம் இருக்கும் பட்சத்தில் வாசித்து தங்களின் கருத்தை சொல்லுங்கள்.

துரைடேனியல் said... Reply to comment

Nallarukku Sago.
TM 8.

Unknown said... Reply to comment

முதல்முயற்சியே சிறப்பு, மீண்டும் எழுதுங்கள் எடுத்துக்கொண்ட கருவும் சமூக அக்கறையுடன் இருப்பதால் நன்று,

Yoga.S. said... Reply to comment

அருமையாக கதையை நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்!!!

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

நமக்கு சம்பந்தமில்லாத பதிவு. போயிட்டு அடுத்த பதிவுக்கு வரேன்

சுதா SJ said... Reply to comment

பாஸ் கதை நல்லா இருக்கே....... தொடர்ந்து கதைகள் எழுதலாமே.......
ஒரு குடிகாரன் கதையை நகைசுவை கலந்து கொடுத்து இருக்கீங்க..... குட் போஸ்

மகேந்திரன் said... Reply to comment

நல்ல முயற்சி நண்பரே,

அழகாக கொண்டு செல்கிறீர்கள்.
குடிகாரன் தானும் கேட்டு தன்னை சுற்றியுள்ள உறவுகள், சமூகம்
அத்தனையும் கெடுத்து வைப்பதை நல்லா சொல்லியிருகீங்க.
வாழ்த்துக்கள்.

வெளங்காதவன்™ said... Reply to comment

நல்லா இருக்குய்யா!!!!

#எடைல "நான்" அப்டீன்ற வார்த்தைக்கு பதில, கபிலன் அப்டீன்றத யூஸ் பண்ணி இருக்கலாம்...

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

நல்ல அலசல்! இது ஒரு மன நோய்! இந்த குழிக்குள் நிறைய பேர் விழுகிறார்கள். அவர்களாக திருந்த வேண்டும்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

Yaathoramani.blogspot.com said... Reply to comment

கதை மிகப் பிரமாதம்
வித்தியாசமாக சிந்தித்து மிக அழகாகக் கொடுத்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 13

arasan said... Reply to comment

நல்லா வந்திருக்குங்க நண்பரே ,..
தொடருங்கள் .. வாழ்த்துக்கள்

சசிகுமார் said... Reply to comment

//சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்டி //

மங்காத்தா அஜித் மாதிரி சொல்றாரு... கதை மிக அருமை...

ரசிகன் said... Reply to comment

நல்ல முயற்சி. முதல் கதையிலேயே விழிப்புணர்வை விதைக்கும் விதமாக எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Ruthra said... Reply to comment

சூப்பர் தலைவா
நேசமுடன்
ருத்ரா

M.Sathishkumar said... Reply to comment

GOOD

தனிமரம் said... Reply to comment

குடிப்பழக்கத்தால் பஸ்சில் போய் வருவோர் எதிர் நோக்கும் சாவாலை சிறுகதையாக்கித் தந்து சிந்திக்கவைத்து விட்டீர்கள் .இடையில் நிறுத்திக் கதை சொல்லும் முயற்ச்சி நல்லது எனினும் கபிலன் பஸ்தரிப்பில் இருந்து பேசுவதாக இல்லாமல் அவரின் மனைவிக்கு வரும் தொலைபேசி அழைப்பு முலம் கதையை முடிக்க முயன்றிருந்தால் இன்னும் சிறப்பு என்பது அடியேனின் கருத்து சகோ! 
குடியின் கொடுத்தலைச் சொல்லும் கதை . 

தனிமரம் said... Reply to comment

சிறிய இடை வேலையின் பின் தொடர்ந்து சந்திக்கலாம் சகோதரா!

ராஜா MVS said... Reply to comment

தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்... நண்பா...

முதல் முயற்ச்சியே அருமை...

அம்பலத்தார் said... Reply to comment

கோகுல் நீங்க கதையை சுவாரசியமாக சொல்லினிங்க. ஒரு சின்னவிடயம் கவனிக்கத்தவறிவிட்டியள்.கதையில் வரும் யாரோ ஒரு பாத்திரம் கபிலன் என்பதுபோல ஆரம்பித்து பின்பு கதை நாயகனாக உங்களை உருவகப்படுத்தி நீங்களே சொல்வதாக தொடர்ந்த கதை இறுதியில் மீஇண்டும் கபிலன் ரெலிபோன் பண்ணுவதாக மாறுகிறது மாறிவிடுகிறது. கதாசிரியர் தானே கதை சொல்வதாக எழுதவிரும்பினால் கதைபூராவும் எதோ ஒருவிதத்தில் அதேபாணியில் தொடர்வதே நன்றாக இருக்கும்.

ad said... Reply to comment

அம்பலத்தார் said...
கோகுல் நீங்க கதையை சுவாரசியமாக சொல்லினிங்க. ஒரு சின்னவிடயம் கவனிக்கத்தவறிவிட்டியள்.கதையில் வரும் யாரோ ஒரு பாத்திரம் கபிலன் என்பதுபோல ஆரம்பித்து பின்பு கதை நாயகனாக உங்களை உருவகப்படுத்தி நீங்களே சொல்வதாக தொடர்ந்த கதை இறுதியில் மீஇண்டும் கபிலன் ரெலிபோன் பண்ணுவதாக மாறுகிறது மாறிவிடுகிறது. கதாசிரியர் தானே கதை சொல்வதாக எழுதவிரும்பினால் கதைபூராவும் எதோ ஒருவிதத்தில் அதேபாணியில் தொடர்வதே நன்றாக இருக்கும்."

இதத்தான் நானும் சொல்ல நினைச்சேன்.
கதை நன்றாக இருக்கிறது.

Unknown said... Reply to comment

கதை நல்லா இருக்கு

Unknown said... Reply to comment

நல்லாதான்யா எழுதுறீரு..வாழுத்துக்கள்.. தொடரவும்...

நிரூபன் said... Reply to comment

வணக்கம் கோகுல் பாஸ்..
கதை நகர்வும், காட்சிப் பிரிப்பும் அருமை. ஆனால் சிறுகதையில் நீங்களே கதையில் பங்கு பெறும் பாத்திரமாக வந்து விட்டு, பின்னர் இன்னொருவருக்கூடாக கதையினைச் சொல்வதை நிறுத்தியிருக்கலாம்.

அல்லது முழு மூச்சில் குடிகாரனைப் பற்றி கதையாகச் சொல்லியிருக்கலாம்.

அடுத்த சிறுகதையில் கூடிய கவனம் செலுத்தினால் அசத்தலான கதை எழுதலாம் பாஸ்.
வாழ்த்துக்கள்.