ரயில், மலை,கடல் இம்மூன்றும்
ரசிக்க ரசிக்க அலுக்காதென்பர்
ஆனால் இதை விடுத்து
வெறுக்கத்தக்க இடத்தில்
முதலாவதாய் கடல் வந்து நின்றது ஏனோ?
பொறுமைக்கு உதாரணமாய்
பூமித்தாயே உனைத்தானே சொல்வார்கள்
பூமித்தாயே!நீ கடல்தாயோடு
கைகோர்த்துக்கொண்டு
சுனாமி அலைகளை
எமனின் பினாமியாய் அனுப்பி
அரங்கேற்றிய திருவிளையாடலில்
அழிந்து போனது உன் பிள்ளைகளே!
அதிலும் என்ன பாவம் செய்தன
அலையில் கால் நனைத்து
சிரித்து விளையாடி மகிழ்ந்து திரிந்த
சின்னஞ்சிறு பிஞ்சுகள்?
கோழி மிதித்து குஞ்சு முடமான
கொடுமை நிகழ்ந்தது உன் அரங்கேற்றதால்!
உப்பிட்டவரை உள்ளளவும் நினைஎன்பர்
உப்பிட்ட நீயே
உயிர்க்கொல்லியாக மாறினாய்
உன்னை எப்படி உள்ளளவும் நினைக்க?
உன் நடன அரங்கேற்றத்திற்கு மேடையாக
எங்கள் வாழ்க்கையா கிடைத்தது?
நீ என்ன கோபத்தில் கொப்பளித்தாயோ?
உன் மீது எங்கள் கோபம் கொப்பளிக்க செய்து விட்டாய்
என்ன சொல்லி தேற்றப்போகிறாய்?
ஏதுமறியாமல் என்ன செய்வதென்று புரியாமல்
உறவிழந்து உடமையிழந்து
உருகி நிற்கும் உன் பிள்ளைகளை?
நீ தேற்றுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை
வருங்காலத்தில் உனது ஆட்டம் தொடராமல்
வங்கத்தாய் என சொல்லும் உன் பிள்ளைகளின்
வார்த்தையை காப்பாற்று அதுவே போதும்!