Tuesday, December 18, 2012

மாணவர்கள் விரும்பித்தான் படியில் தொங்குகிறார்களா?

கடந்த பதிவின்(வாசிக்காதவர்கள் அழுத்தவும்) தொடர்ச்சியாக அரசுப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் பற்றி எழுதியதை பதிவிடுவதற்குள் நிகழ்ந்திருக்கிறது சென்னையில் மாநகரபேருந்து விபத்தில் சிக்கி நான்கு மாணவர்கள் பலியான சம்பவம்.சொல்லப்போனால் இந்த தொடர்பதிவு எழுதுவதற்கான எண்ணம் உருவானது இதைப்போன்ற ஒரு நிகழ்ச்சிதான்.


கடந்த மாதம் ஊருக்கு(இளம்பிள்ளை-இராசிபுரம்) சென்றிந்த போது ஓரு நகரப்பேருந்தில் பயணித்தபோது உதித்தது தான் இந்த எண்ணம்.அது எல்லோருக்கும் தெரிந்த பாஷையில் பீக் அவர். பேருந்து கிளம்பி இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குள் பேருந்து நிரம்பி வழிந்தது.ஒவ்வொரு நிறுத்தத்திலும் கிட்டத்தட்ட இருபது மாணவ மாணவிகள் கூடவே நான்கைந்து பயணிகள்.எள் போட்டால் எண்ணெயாக இறங்கும் அளவுக்கு கூட்டம் என மிகையாக சொன்னாலும் அது சரியாகத்தான் தோன்றுகிறது.

பலர் நினைப்பது போல உள்ளே இடம் இருந்தும் படியிலிருந்து உள்ளே செல்ல மறுக்கும் மாணவர்களில்லை அவர்கள்.சொல்லப்போனால் இரண்டாம் படி வரை சில மாணவிகளே நின்றுகொண்டு வந்தனர்.முன்புற படிக்கட்டிலும் பின்புற படிக்கட்டிலும் சுமார் பத்து பேர் தொங்கிக்கொண்டு வந்தனர்.ஒவ்வோர் நிறுத்தத்திலும் இறங்கி வலிக்கும் கைகளை தேய்த்து ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.


பயணிகளே ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏங்க ஸ்டாப்பில நிறுத்துறீங்க,இவ்ளோ கூட்டமா இருக்குல்ல,நிறுத்தாம போங்கனு சொல்றாங்க,கண்டக்டரோ நீங்க இப்டி சொல்றீங்க ஸ்கூல் டைமுக்கு இதாங்க பஸ்சு இத விட்டா அவங்க ஸ்கூல் போக முடியாது,நிறுத்தாம போனா அப்புறம் அடுத்த சிங்கிள் வரும் போது பஸ்ஸை மறிச்சு கலாட்டா பண்ணுவாங்க,இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோனு புலம்பினார்.
  

எப்படி பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திலிருந்து(எல்லா ஊரிலும்) கிட்டத்தட்ட பத்திலிருந்து பதினைந்து கி.மீ பயணம் செய்கின்றனர் மாணவர்கள்.தனியார் பள்ளி வாகனங்களுக்கு மட்டும் எத்தனையோ விதிமுறைகள் விதிக்கபட்டுள்ளன( சிறுமி ஸ்ருதி மரணத்திற்கு பிறகே).ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பஸ்பாஸ் வழங்குவதுடன் நின்றுவிடுகிறது அரசின் கடமை.


ஒவ்வொரு வழித்தடத்திலும் பள்ளிநேரத்தில் எல்லா பேருந்துகளிலும் ஏதாவது பத்து,இருபது மாணவர்கள் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.என்ன தான் தீர்வு? எல்லா வழித்தடங்களிலும் உள்ள பள்ளிகளில் எத்தனை இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்படுகிறது என்பதை கணக்கில் கொண்டு பள்ளி நேரங்களில் அந்தந்த வழித்தடங்களில் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கலாம்.புதுச்சேரியில் இதைப்போன்ற ஒரு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.அதாவது பல வழித்தடங்களில் கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து இருபத்தைந்து கி.மீ வரை பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கென ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதில் அரசுப்பள்ளி மட்டுமல்லாமல்தனியார் பள்ளி,கல்லூரி,பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ மாணவர்கள் உட்பட அந்த வழித்தடத்தில் உள்ள எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அடையாள அட்டையை காட்டிவிட்டு ஒரு ரூபாய் கட்டணத்தில் போய் வரலாம்.இது மாதிரி ஒரு முயற்சியை தமிழகத்திலும் பரிசீலிக்கலாமே .....  

மாணவர்களை தண்டிப்பதோ,பேருந்து ஓட்டுனர்கள்,நடத்துனர்களை வஞ்சிப்பதையோ தவிர்த்து இதைப்போன்ற விசயங்களைப்பற்றி சிந்திக்கலாம்.இப்படியெல்லாம் செய்தும் படியில தான் தொங்குவேன் அப்டினு அடம புடிக்கறவங்கள "புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்"
மேலும் வாசிக்க "மாணவர்கள் விரும்பித்தான் படியில் தொங்குகிறார்களா?"

Wednesday, December 5, 2012

கல்விக்கண் எல்லோருக்கும் தெரிகிறதா?


மனிதன் முழுமையாக(?) பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு அவனது அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றாக அதிகரித்தே வருகிறது.ஆரம்பத்தில் உணவு நாகரீகம் பற்றிய அறிவு தோன்றியவுடன் உடை பிறகு இருப்பிடம்.அந்த வரிசையில் ஆறாம் அறிவின் இருப்பை உணர்ந்து கொள்ள ஏதாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இன்றைக்கு அடிப்படைத்தேவைகளில் ஒன்றாக கல்வியும் இணைந்திருக்கிறது. 


ஆரம்ப காலங்களில் கண் போன கால் போன போக்கில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவன் பிற்பாடு கல்விக்கான வரைமுறையையும் வகுத்துக்கொண்டான்.(அப்படி செய்யாமலே இருந்திருக்கலாம்).யாரெல்லாம் கற்க வேண்டும் என்ற வரைமுறையும் தோன்றியது.இப்போது அனைவருக்கும் கல்வியின் தேவை இவர் அவர் என்றில்லாமல் எல்லோருக்கும் அவசியமாகி இருக்கிறது.தமிழகத்தை பொறுத்தமட்டில் கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முக்கிய பங்காற்றி இன்றுவரை நினைத்து பார்க்க வைத்தவர் கர்ம வீரர் காமராஜர் என நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.  



இப்படி இன்றியமையாத கல்வி இன்றைக்கு எங்கே கிடைக்கிறது என்பதை விட எங்கே விற்கப்படுகிறது என்றே கேட்க தோன்றுகிறது.இங்கே சாப்பாடு எந்த ஹோட்டல்ல நல்லா இருக்கும்னு கேட்பது போல இங்க எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்,எங்க நல்லா சொல்லி தருவாங்க அப்படின்னு கேட்கு நிலை சாதாரணமாகிவிட்டது.இப்படியிருக்க அரசுபள்ளிகளின் நிலை என்னவாக இருக்கிறது?


அடிப்படையில் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அரசுப்பள்ளிகளுக்கு அரசு செலவிடும் அளவுக்கு விளைச்சல்(output) இருக்கிறதா என்றால் ?????????????



இத்தனைக்கும் அரசுப்பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் வசதிகள் ஏராளம்.அரசுப்பள்ளிகளுக்கு இருக்கும் இட வசதியில் பாதியையாவது பெரும்பாலான தனியார் பள்ளிகளின் பார்க்க முடியுமா?ஆனால் இந்த வசதிகள் மாணவர்களுக்கு சென்று சேர்வதில்தான் சிக்கல்.


அடுத்த பதிவில் .....

அரசு தரும் உதவிகளை மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்வது யார்?
அரசு பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு தரலாமா?
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ள போக்குவரத்து சிக்கல்....
மேலும் வாசிக்க "கல்விக்கண் எல்லோருக்கும் தெரிகிறதா?"