Thursday, December 29, 2011

ஒரு சொட்டு தண்ணீர்,சில துளி பெட்ரோல்,சில மணித்துளி மின்சாரம்.....



இப்போ சொல்லப்போற சில விஷயங்கள்,அந்நியன் படத்துல விக்ரம் (ஷங்கர்,சுஜாதா மூலமா)சொன்னது போல இருக்கும்.நம்ம ஒவ்வொருதருக்குள்ளும் ஒரு அந்நியன் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்.ஆனா எப்பவும் தூங்கிக்கிட்டே இருப்பான்.அவன அப்பப்ப சோடாவோ,பச்சைத்தண்ணியோ எது கிடைக்குதோ அதை தெளிச்சு எழுப்பலாம்னு ஒரு முயற்சி.ஆனா ஒரு சின்ன மாற்றம் அன்னியன் மாதிரி நினைக்கணும் அம்பி மாதிரி  செயல்படனும்.


விசயத்துக்கு வருவோம். பல நேரங்கள்ல சாப்பிட போகும் போதோ,இல்ல மத்த நேரங்கள்ல கை கழுவுற சமயங்கள்ல என்ன பண்றோம்,தண்ணியை தொறந்து விட்டுட்டு கைய நனைச்சிட்டு சோப்பு போட்டு தேய்க்குறவரைக்கும் தண்ணி அது வாக்குல போய்க்கிட்டே இருக்கும்.கையை நனைச்சிட்டு சோப்பு போடுறவரைக்கும் தண்ணியை நிறுத்தலாமே!ஒரு அரை லிட்டர் தண்ணி மிச்சமானாலும்.............
இதே மாதிரி தண்ணி கசிவு இருக்குற பைப் ஏதாவது இருந்தா உடனடியா சரிசெய்வதும் பல லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தும்(யோவ் மெட்ராஸ் மாதிரி ஊருல தண்ணி கிடைக்குறதே கஷ்டமா இருக்கு இதுல நாங்க ஏங்க வீணாக்க போறோம்னு கொஞ்சம் பேரு கேக்குறாங்க போல)
 இது ஒரு சின்ன உதாரணம் இதைப்போல பல தருணங்களில்(காய்கறி கழுவுகையில்,பிரஷ் பண்ணும் போது), பல அரை லிட்டர்கள் வீணாவதை தவிர்க்கமுடியும்.முடியுமா?


அப்புறம் மின்சாரம்.இல்லாத விசயத்த பத்தி என்ன பேச்சு அப்படிங்கறீங்களா? அது தெரிஞ்ச விஷயம் தானே.சரி இருக்கறப்போ என்ன பண்ணலாம்.முக்கியமா வீட்டுல ஏதாவது குண்டு பல்ப் இருந்தா அதுக்கு குட்பை சொல்லுவோம்.இது மின்சார சிக்கனத்துக்கு மட்டுமில்ல உலக வெப்பமாதல் குறையவும் நிறைய உதவும்.பிளான் பண்ணி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்தினாலே இன்னும் கொஞ்சம் மின்சார செலவு கொறையும்.(இன்னும் கொஞ்ச நாள்ல கரண்ட் சார்ஜ் உயர்த்தப்படும் போது ஆட்டோமேட்டிக்கா கொறையும்னு நினைக்கிறேன்)முக்கியமா ஏ.சியை சில்லுன்னு வைச்சு யூஸ் பண்ணாம 27-29 டிகிரி செல்சியஸ்ல பயன்படுத்துறது நல்லது(உடம்புக்கும்).

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் பெட்ரோலியபொருட்கள், பெட்ரோல்,டீசல்,சமையல் கேஸ் தவிர நாம தினமும் பயன்படுத்துற நிறைய பொருட்கள் பெட்ரோலியத்தோட வழித்தோன்றல்கள் தான்( by products)கிட்டத்தட்ட 5000 க்கும் மேல. http://www.ranken-energy.com/Products%20from%20Petroleum.htm (இந்த லின்க்ல பாத்தா தெரியும்).இந்த எல்லா பொருட்களையும் தேர்ந்தெடுத்து யூஸ் பண்றத குறைப்பது கஷ்டமான விஷயம்,நேரடியா நம்மால முடிஞ்சா அளவு சிக்னல்ல நிக்கும் போது என்ஜின் ஆஃப் பண்றது,தேவையில்லாம வண்டி எடுத்துக்கிட்டு சுத்துறத தவிர்க்கறது,திட்டமிட்ட பயணம்,குழுவா பயணிக்கறது,இது போல செய்யலாம்.இதே மாதிரி சமையல் கியாஸ் பயன்படுத்தும் போதும் திட்டமிட்டு செஞ்சா நிறைய மிச்சப்படுத்தலாம்.கியாஸ் மிச்சப்படுத்த சில டிப்ஸ்(கிளிக்கவும்)


இப்படியெல்லாம் பண்ணா எனக்கு என்ன பயன் அப்படின்னு கேக்குறவங்களுக்கு-இந்த உலகத்தின் கடைசி துளி தண்ணீர் ,கடைசி சொட்டு பெட்ரோல்,கடைசி மணித்துளி மின்சாரம் நீங்க மிச்சப்படுத்தியதா இருக்கும்.அந்த பெருமை உங்களுக்குத்தான்.புது வருஷம் வேற பொறக்கப்போகுது,இந்த வருசத்துல இத செஞ்சு பாக்கலாமா?


மேலும் வாசிக்க "ஒரு சொட்டு தண்ணீர்,சில துளி பெட்ரோல்,சில மணித்துளி மின்சாரம்....."

Monday, December 26, 2011

எமனின் பினாமியான சுனாமி...



ரயில், மலை,கடல் இம்மூன்றும்
ரசிக்க ரசிக்க அலுக்காதென்பர்
ஆனால் இதை விடுத்து
வெறுக்கத்தக்க இடத்தில்
முதலாவதாய் கடல் வந்து நின்றது ஏனோ?



பொறுமைக்கு உதாரணமாய்
பூமித்தாயே உனைத்தானே சொல்வார்கள்
பூமித்தாயே!நீ கடல்தாயோடு
கைகோர்த்துக்கொண்டு
சுனாமி அலைகளை
எமனின் பினாமியாய் அனுப்பி
அரங்கேற்றிய திருவிளையாடலில்
அழிந்து போனது உன் பிள்ளைகளே!
அதிலும் என்ன பாவம் செய்தன
அலையில் கால் நனைத்து
சிரித்து விளையாடி மகிழ்ந்து திரிந்த
சின்னஞ்சிறு பிஞ்சுகள்?


கோழி மிதித்து குஞ்சு முடமான
கொடுமை நிகழ்ந்தது உன் அரங்கேற்றதால்!
உப்பிட்டவரை உள்ளளவும் நினைஎன்பர்
உப்பிட்ட நீயே
உயிர்க்கொல்லியாக மாறினாய்
உன்னை எப்படி உள்ளளவும் நினைக்க?
உன் நடன அரங்கேற்றத்திற்கு மேடையாக
எங்கள் வாழ்க்கையா கிடைத்தது?
நீ என்ன கோபத்தில் கொப்பளித்தாயோ?
உன் மீது எங்கள் கோபம் கொப்பளிக்க செய்து விட்டாய்

என்ன சொல்லி தேற்றப்போகிறாய்?
ஏதுமறியாமல் என்ன செய்வதென்று புரியாமல்
உறவிழந்து உடமையிழந்து
உருகி நிற்கும் உன் பிள்ளைகளை?
நீ தேற்றுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை
வருங்காலத்தில் உனது ஆட்டம் தொடராமல்
வங்கத்தாய் என சொல்லும் உன் பிள்ளைகளின்

வார்த்தையை காப்பாற்று அதுவே போதும்!





மேலும் வாசிக்க "எமனின் பினாமியான சுனாமி..."

Friday, December 23, 2011

மனசாட்சியுடன் ஒரு பயணம்.......



திரும்பிப்பார்த்தல் என்பது ஒரு சுகானுபவம்.இந்த வருடம் நான் கடந்து 
வந்தவற்றை திரும்பிப்பார்க்க எண்ணிய போது எனது மனசாட்சி நானும் 
கூட வருவேன் என்றது,சற்றே பயத்துடன் சரி வா போலாம்னு கூட்டிக்கிட்டு கிளம்புறேன்.

இனி நானும் எனது மனசாட்சியும்.
                        ( நன்றி -http://www.kalachuvadu.com/ )
முதலில் இந்த திரும்பிப்பார்த்தலுக்கு வாய்ப்பளித்து என்னை எழுத அழைத்த நண்பர் மயிலிறகு மயிலன் அவர்களுக்கு நன்றி(திரும்பிப்பார்க்க வாய்பளிச்சதுக்கா இல்ல ஒரு பதிவு தேத்த வாய்ப்பளிச்சதுக்கா?) போன வருஷ கடைசில புது கம்பெனிக்கு மாறினதுனால இந்த வருஷ முதல் நாள் முன்பு இருந்த இடத்துக்கு (காரைக்கால்) போய் நண்பர்கள் வீட்டுக்கு,அப்புறம்,தங்கிருந்த வீட்டுக்கு போய் ஓனருக்கு ஸ்வீட் கொடுத்து, (ஸ்வீட்டுன்னு மொட்டையா சொன்னா எப்படி அல்வா குடுத்தேன்னு தெளிவா சொல்லு,அப்புறம் கொஞ்சூண்டு ஸ்வீட் கொடுத்துட்டு நீ முழுங்கிட்டு வந்ததையும் சொல்லு)  நண்பர்களோட மன்மதன் அம்பு படம் பாத்து(ஓசியில)ஆரம்பமானது இந்த வருஷம்.

அப்புறம் கொஞ்ச நாள்ல பொங்கல்(அது யாருக்கும் தெரியாது பாரு)சொந்த ஊர்ல செம கொண்டாட்டம்(ஆமா இவரு பொங்க வைச்சு,அஞ்சாறு மாடு புடிச்சு கிழிச்சாரு).பிறகு நண்பர்களோட ஒரு நாள் மகாபலிபுரம் ஜாலி பயணம்(எந்த அளவுக்கு ஜாலின்னு சொல்லு.)

இந்த வருஷம் இன்னொரு சந்தோஷ நிகழ்ச்சி.என் மடியில அக்கா பொண்ண உக்கார வைச்சு மொட்டையடிச்சு காது குத்தினது.(டேய் பாவம் அந்த பச்ச புள்ள அந்த கத்து கத்தி அவஸ்தைபட்டது உனக்கு சந்தோசமா? அதுக்கப்புறம் வீட்டுக்கு போனப்போ பயந்துக்கிட்டு உன்கிட்ட வரவேயில்லையே அத சொல்லு).

மனசை ரொம்ப பாதிச்ச விஷயம் என் சித்தி ஒருத்தவங்க உடல் நலம் சரியில்லாம இறந்துட்டாங்க.ரொம்ப வயசும் கிடையாது.எங்க மேல ரொம்ப ப்ரியமா இருப்பாங்க.(கவலைப்படாதடா,காலம் மனக்காயங்களுக்கு நல்ல தீர்வு தரும்)
                                            நன்றி-http://www.kalachuvadu.com/

இந்த வருஷம் வாங்கினதுல மறக்க முடியாதது கணினி.(இருக்காதா பின்னே அதுக்கப்புறம் தானே பிளாக் எழுத ஆரம்பிச்சு என்னை தூங்க விடாம தொந்தரவு பண்ண ஆரம்பிச்ச).அப்புறம் கொஞ்சம் புத்தகங்கள்(வாங்கி மட்டும் தான் இருக்கேன்னு தெளிவா சொல்லிடு.பெரிய படிப்பாளின்னு சீன போடாதே).ரொம்ப நாளா படிக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்த பொன்னியின் செல்வன் இப்போதான் வாங்கியிருக்கேன்(இனிமேலும் நினைச்சுக்கிட்டு இருக்காம படி).



இந்த வருஷம் நிறைய நண்பர்களோட ,உறவினர்களோட திருமணங்கள்ல கலந்துக்க நிறைய பயணம் காரைக்கால்,நாகர்கோவில்,முசிறி,ஆத்தூர்,நாமக்கல்,திண்டிவனம் இப்படி நிறைய ஊர்.அப்புறம் சுற்றுலாவா வயநாடு,கொச்சின்,அதரப்பள்ளி அருவி இங்கெல்லாம் நண்பர்களோட..( நல்லா கம்பெனியில பொய் சொல்லிட்டு ஊர் ஊரா சுத்தறத்துக்கு பேரு தான் பயணமா?அவ்வ்வ்வ்).




இந்த வருஷம் மறக்க முடியாத நிகழ்வுன்னா நான் பிளாக் எழுத ஆரம்பிச்சதுதான்.தற்செயலா நண்பன் மூலமா பதிவுலக அறிமுகம் கிடைச்சு இப்போ நூறு பதிவுகளை கடந்து, நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தியது இந்த வருஷம் தான்.யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு நானும் யூத் பதிவர் என காட்டியாச்சு.ஈரோடு சந்திப்பில் கலந்து கொள்ள முடிய வில்லை என்ற வருத்தமிருக்கிறது(ம்.போயிருக்கலாமில்ல அன்னைக்கு என்னத்த வெட்டி முறிச்ச?அதுவுமில்லாம ரெண்டு மூணு பதிவு தேத்தியிருக்கலாமில்ல(ஹி ஹி)).நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்பை இழந்தாச்சு.( ஃப்ரீயா விடு அடுத்த வருஷம் ஜமாச்சுடலாம்)




அப்புறம் புது வருசத்துல என்ன பண்ணனும்னா( டேய் இரு இரு இந்த வருஷம் என்ன கிழிச்சிருக்க).அட இரப்பா ஊடால ஊடால கரைச்சல கொடுத்துக்கிட்டு அதைத்தான் சொல்ல வந்தேன்.இந்த வருஷம் என்னென்ன பண்ணனும்மு எதுவும் முடிவு பண்ணல.செய்யவும் இல்ல.புது வருஷம் ஏதாவது நடக்குதான்னு பாப்போம்.அனைவருக்கும் வாழ்த்து சொல்லி(டேய் இரு இரு நான் இன்னும் நிறைய பேசணும்) விடை பெறுகிறேன்( நான் இன்னும் சொல்ல வேண்டியது...........................)வணக்கம்.

ஸ்ஸ்ஸ்பா இந்த மனசாட்சியை இதுக்கு தான் பேசவே விடுறதில்ல.எவ்வளவு டிஸ்டபென்ஸ் பண்றான் ராஸ்கல்...


நட்புடன்,
ம.கோகுல்.
மேலும் வாசிக்க "மனசாட்சியுடன் ஒரு பயணம்......."

Tuesday, December 20, 2011

உப்புள்ள பண்டமும் குப்பையிலே! இது நியாயமா?


நியூட்டனின் மூன்றாம் விதி எல்லோருக்கும் நல்லா தெரிந்திருக்கும்,ஒவ்வொரு வினைக்கும்(செயலுக்கும்)அதற்கு சமமான எதிர்வினை இருக்கும் என்பதுதான்.நாம ஒரு இடத்துல ஏ.சி போட்டுக்கிட்டு சிலு சிலு ன்னு அனுபவிச்சிக்கிட்டு இருக்கும் அதே நேரத்துல எங்கேயோ நாம் அனுபவிக்கும் குளுமைக்கு ஏற்ப அதே அளவு வெப்பம் உருவாகிக்கிட்டு இருக்கும்.


இது மாதிரி பல விசயங்களை சொல்லலாம்.இன்றைய தேதியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவில் பெருமளவில் பணம் செலவளிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.இவ்வாறு செய்வது அவரவர் தனிப்பட்ட விஷயம்.ஆனால் இது போன்ற விழாக்களில் விருந்தின் போது வீணாக்கப்படும் உணவு? எந்த அளவுக்கு உணவு வீணாக்கப்படுகிறதோ,அந்த அளவுக்கு உணவு தேவைப்படும் மக்களுக்கு உணவு மறுக்கப்படுகிறது.என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற மாதிரி இருக்கா?கொஞ்சம் யோசிச்சு பாருங்க சுத்தி வளைச்சு உண்மை இந்த இடத்தில வந்து நிற்கும்.




பல நிகழ்ச்சிகளின் இன்றைக்கு காணும் சூழல்,விருந்து துவங்கும் முன்பாகவே இலையில் எல்லா பதார்த்தங்களும் வைக்கப்பட்டு விடுகின்றன.அந்த உணவு வகைகள் பிடித்தாலும் சரி,பிடிக்காவிட்டாலும் சரி.அதே போல சில உணவுகள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது,ஆனால் அவையும் பரிமாறப்பட்டிருக்கும்.குழந்தைகள் அமரும் இலைகளில் கூட பெரியவர் சாப்பிடும் அளவிற்கு உணவு.


இது எல்லாம் முதல் பந்தியில் தான் அடுத்தடுத்த பந்திகளில் காத்திருந்து தான் உட்காரமுடிகிறது என்று சொன்னாலும்,என்ன பரிமாறப்படுகிறது என பார்ப்பதற்குள் இலையில் வைத்துவிடுவார்கள்.பெரும்பாலான விருந்துகளில் கணிசமான அளவில் நிச்சயமாக உணவுப்பொருட்கள் வீணாகிறது.விருந்துகளில் தான் என்று மட்டுமல்ல ஹோட்டல்களில் சாப்பிடும் போதும் அளவுக்கதிகமாக ஆர்டர் செய்தது விட்டு பாதி சாப்பிட்ட்ப்போவது அல்லது சிலர் வேண்டுமென்றே சாப்பிடாமல் பாதி வைத்துவிட்டு போவதும் நடக்கிறது.தெரியாத  உணவு வகைகளை ஆர்டர் பண்ணிட்டு சுவை பிடிக்காம சாப்பிட முடியாமலும்,சில சமயம் ஆர்டர் செய்த உணவு அளவு அதிகமா இருப்பதும் வீணாவதற்கு காரணமாகுது.  


தீர்வு தான் என்ன? புதுடெல்லியில் இது போன்ற விழாக்களில் வீணாகும் உணவுப்பொருட்களை சேகரித்து உணவில்லாதவர்களுக்கு வழங்கும் வங்கி ஒன்றை துவக்குவதற்கான ஏற்பாடுகள் கடந்த செப்டம்பரில் துவக்கப்பட்டுள்ளது.இது எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று தெரியவில்லை. நாம் அரசை எதிர்பாராமல் அந்தந்த ஊர்களில் இருக்கும் ஏதாவது சேவை நிறுவனங்களை அணுகி பரிமாறப்படாமல் மீதியான உணவுகளை அந்தந்த பகுதிகளில் இயங்கும் ஏதாவது இல்லங்களுக்கு வழங்குமாறு ஏற்பாடு செய்யலாமே!ஹோட்டல்களிலும் தெரியாத உணவுகளை ஆர்டர் செய்யும் போது அதைப்பற்றி தெரிந்துகொண்டு ஆர்டர் செய்தால் நலம்,அது மட்டுமல்லாமல் சும்மா பேருக்கு சாப்பிட உக்காந்து  ஸ்டைலுக்கு கொஞ்சமா கொறிச்சுட்டு போகும் பழக்கம் யாருக்காவது இருந்தால் தயவு செய்து அதை மறந்துட சொல்லி சொல்லுங்கள்.




பின்குறிப்பு – மீதமான உணவுகளை உரியவர்களுக்கு சேர்க்கும் உங்களுக்கு தெரிந்த வழிகளையும் ,கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.



மேலும் வாசிக்க "உப்புள்ள பண்டமும் குப்பையிலே! இது நியாயமா?"

Monday, December 19, 2011

அவார்டு வாங்கலியோ அவார்டு...?



எதெதுக்கோ என்னென்னவோ அவார்டு கொடுக்கறாங்க ,நாமளும் சில 

அவார்டு கொடுக்கலாம்னு.............


விடா முயற்சி விஸ்வரூப வெற்றி  விருது – ஜாமீன் கணை தொடுத்து 

வெளிவந்த தமிழகத்தின் தாரகைக்கு.


மூட்ரா  கேட்ட ,போட்றா தாப்பாள விருது – தமிழகத்தை சுத்தி 

காம்பௌண்ட் கட்ட சொன்ன கேப்டனுக்கு.


 நான் சரியா பேசுறனா விருது – இணையதளங்களுக்கு தணிக்கை இருக்கு 

ஆனா இல்லைன்னு மாத்தி மாத்தி பேசும் கபில் சிபிலுக்கு.


தீயா வேலை செய்யணும் நல்லத்தம்பி விருது -

ஸ்பெக்ட்ரம் வழக்கு: சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த 

முடிவெடுத்திருக்கும் 2-ஜி நாயகனுக்கு.



சோறுன்னா சட்டி திம்போம் சொன்ன பேச்சை கேக்க மாட்டோம் விருது-

முல்லைப் பெரியாறு அணையை ராணுவப் பொறியாளர்களை வைத்து 

ஆராய வேண்டு்ம். எனக்கூறும் சேட்டன்மார்களுக்கு





போன் ஒயறு பிஞ்சு ஒரு வாரம் ஆகுது விருது- கேரளாவில் தொடர்ந்து 

தமிழர்கள் தாக்கப்பட்டால் திமுக முக்கிய முடிவை எடுக்கும் என 

சொல்லியிருக்கும் தமிழினத்தின் தலைவருக்கு.





இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒருஆல்இன் ஆல்அழகு ராஜா 

வேணும்ங்கறது விருது- வரலாற்று குறிப்புகள்தொழில்நுட்ப தகவல்கள் 

மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய அம்மாவுக்கு.  



என்ன சைதை தமிழரசி தக்கப்பட்டாரா?விருது- முல்லைப் பெரியாறு 
அணைக்காகப் போராடும் தமிழர்கள் மீது வழக்குப் போடுவதா?- என்று இவ்வளவு நாள் கழித்து பொங்கியிருக்கும் தள்ளு தள்ளு தலைவருக்கு.


இன்னைக்கு மட்டும் வீடு போய் சேந்துட்டேன் ஜெய்ச்சுட்டேன் விருது- தொடர்ந்து பல சிக்கலில் மாட்டித் தவிக்கும் ப.சியாருக்கு.


  

என்னா முக்குனாலும் நடக்காது விருது  - என்ன நடந்தாலும் அசைந்து கொடுக்காத நமது மாண்புமிகு மௌனகுருவுக்கு.
  




ஆடறா ராமா,தாண்டுறா ராமா விருது - ஆடத்தெரியாதவர்களை 

ஆட்டுவிக்கும் தேசத்தின் அன்னை(?)க்கு 




டிஸ்கி-


இவருக்கு பொருத்தமான விருதை வழங்கி சிறப்பிக்குமாறு 

கேட்டுக்கொள்கிறேன்.நன்றி!




மேலும் வாசிக்க "அவார்டு வாங்கலியோ அவார்டு...?"

Wednesday, December 14, 2011

வலைப்பூவின் ( blog ) வரலாறு , இது நூறு

  


நான் தாங்க வலைப்பூ பேசுறேன்.இஸ்கூல்ல  படிக்கும் போது ஆறு தன் 

வரலாறு கூறுதல்,தென்னைமரம் தன் வரலாறு கூறுதல் போன்ற 

வரலாறுகளையும்,கதைகளையும் படிச்சிருப்பீங்க படிக்கலேன்னா 

பாத்தாவது இருப்பீங்க.இன்னைக்கு இணையத்தின் வளர்ச்சியால் சமூக 

வலைத்தளங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததா 

ஆகிடுச்சு.ஊடகங்கள் மறுக்கும் ,மறைக்கும் விசயங்களை உலகுக்கு 

தெரியப்படுத்துவதில் இது போன்ற சமூக வலைத்தளங்களின் பங்கு 

முக்கியமானதாகும்.



நான் எப்படி உருவானேன்?


 Jorn Barger ன்னு ஒருத்தரு 1997- ல weblog அப்படிங்கற பேர்ல முதல் 

முதலாக என்னை துவக்கி வைச்சாரு. அதுக்கப்பறமா 1999 வாக்கில Peter 

Merholz  அப்படிங்கறவர் பேர கொஞ்சம் மாத்தி we blog அப்படின்னு சொல்ல 

ஆரமிச்சு அப்படியே என் பேர் blog அப்படின்னு ஆகிடுச்சு.ஆரம்பத்தில் xanga 

என்ற வலைத்தளம் வலைப்பதிவுகளுக்கு சேவையை வழங்கியது.இப்போ 

பரவலா  உபயோகிக்கப்படும் blogger.com இதே கால கட்டத்தில் சேவை 

வழங்கி வந்தாலும் 2003-ல் google-ல் இந்த தளம் இணைந்த பிறகே அபார 

வளர்ச்சி கண்டது.



தமிழில்


          Google-ன் ஓர் அங்கமாக blogger.com மாறிய பின் தமிழிலும் 

வலைப்பூக்கள் மலர ஆரம்பித்தன.தமிழில் வாசிப்புப்பழக்கம் நாளுக்கு நாள் 

அறுகி வருகிறது என தமிழ் ஆர்வலர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்த 

காலகட்டத்தில் தமிழில் நாளுக்கு நாள் இணையத்தில் எழுதுபவர்களின் 

எண்ணிக்கை அதிகரித்தது ,அதை விட வாசிப்பவர்கள் எண்ணிக்கை 

அதிகமானதும் ,ஆரோக்கியமான நிகழ்வாக கருதப்பட்டது.தமிழின் முதல் 

வலைப்பதிவாளராக கார்த்திகேயன் ராமசாமி என்பவர் 

கருத்தப்படுகிறார்.இவரது முதல் பதிவு ஜனவரி முதல் தேதி 2003-ல் 



என்ன செய்கிறேன்?


                      நான் என்ன செய்கிறேன்.என்னால் என்ன பயன்? 

எந்தவொரு விசயமும் பயன்படுத்தும் விதத்தைப்பொறுத்து அதன் 

விளைவுகள் அமையும்.செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் வெறும் 

தொலைதொடர்பு சாதனமாக மட்டும் பயன்படுத்தப்பட்டதால் வரவேற்பு 

இருந்தது.அஆனால் இன்று அது மனிதனின் ஆறாம் விரலாக 

மாறிப்போனதிலிருந்து எதிர்ப்புக்குரலும் சேர்ந்தே வருகிறது.அது 

போலத்தான் நானும் ஒருவருக்குத்தெரிந்த விசயங்களை 

தெரியாதவர்களுக்கோ அல்லது அந்த விசயத்தின் உண்மை நிலையை 

அறியாதவர்களுக்கோ எடுத்துசெல்கிறேன்.இன்ன துறை என்றில்லை 

எல்லா துறைகளிலும் இன்று எனது பயன்படுத்துபவர்கள் 

இருக்கிறார்கள்.பொழுதுபோக்குக்காக பயன்படுத்துபவர்கள்,என்னை ஒரு 

நண்பனாக,வடிகாலாக,நண்பர்களை அவர்களின் கருத்துக்களை  

இணைக்கும் பாலமாக பயன்படுத்துபவர்கள் பலர். உலகின் பல பகுதிகளில் 

இருப்போரை நண்பர்களாக இணைத்திருப்பதில் பெருமையும் கொள்கிறேன்.





நிறைவாக
         

   என் கதையை,வரலாற்றை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும்  கோகுல் 

மனதில் வலைப்பூவின் நூறாவது பதிவு இது. கடந்த ஜூன் மாதம் 

ஆரம்பித்து கோகுலின் மனதில் தோன்றும் விசயங்களை பகிரத் தொடங்கி 

அப்படி இப்படியென்று நூறு பதிவை எட்டி விட்டது.இந்த வேளையில்  

இந்த வலைப்பூவிற்கு ஆதரவளிக்கும்,பின் தொடரும்,பின்னூட்டமிடும், 

தொடர்ந்து பார்வையிடும் எல்லா நண்பர்களுக்கும்,பதிவுகளை பலருக்கு 

கொண்டு சேர உதவிய திரட்டிகளுக்கும் twitter,facebook இல் இணைந்திருக்கும் 

இதயங்களுக்கும், கோகுலின் சார்பாக,இந்த வலைப்பூவின் சார்பாக 

மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 


இனி நான் (கோகுல்)

தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த 

நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.முக்கியமாக என்னை எழுத 

தூண்டிய எனது நண்பன் ரமேஷ் க்கு(பதிவரல்ல).



மேலும் வாசிக்க "வலைப்பூவின் ( blog ) வரலாறு , இது நூறு"

Monday, December 12, 2011

குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???


ஏண்டா இன்னைக்கு ஊருக்கு கிளம்பினோம் என்று அந்த பேருந்து நிலையக்கூட்டத்தை பார்த்தவுடன் தலையில் அடித்துக்கொண்டான்  கபிலன்.எல்லாரும் அப்படி எங்கதான் போறாங்க என ஒவ்வொருத்தரையும் நிறுத்திக்கேட்க துடித்தான்.திருப்பி அதே கேள்வி அவனிடம் யாராவது கேட்டால்.?அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு வரப்போகும் பேருந்துக்காக காத்திருந்தான்.


பேருந்துக்கட்டணம் ஏத்தியதும் புலம்பித்தள்ளியவர்கள் இப்ப சகஜமாகி பயணத்தை தொடர்வது வியப்பைத்தந்தாலும், நம்மால் என்ன செய்யமுடியும் என்ற மக்களின் ஆதங்கம் கண் முன்னே விரிந்தது.இப்படித்தான் போராட எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் ஒரு சிலர் தான் போராடவும் குரல் கொடுக்கவும் செய்கிறார்கள்.மக்களைப்பொருத்தவரை அவர்களுக்கெல்லாம் நேரமிருக்கிறது நமக்கெல்லாம் வேலையிருக்கிறது என்ற எண்ணம்.

                  
மனதுக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்க சட்டென்று எல்லோரும் பரபரப்பானார்கள்.ஆமாம் பேருந்துதான் வந்தது.இடம் பிடிக்க என்னென்ன தகிடுதத்தம் செய்ய முடியுமோ எல்லாம் நிகழ்ந்தது.பயிற்சியில்லாத நான் தோற்றுப்போனேன்.சரி யாராவது ஒருத்தர் தனி ஆளா சீட்டு போட்டிருப்பார் என நினைத்து பஸ்சுக்குள் நுழைந்து துழாவினேன்.ரெண்டு ஆள் சீட் ஒன்றில் ஒரு துண்டு கிடந்தது.சரி இதில் உக்காந்துக்குவோம் ஒருத்தரா இருந்தா நம்ம அதிர்ஷ்டம் இல்லேன்னா இறங்கி அடுத்த வண்டியப்பாப்போம்னு அந்த சீட்டில் அமர்ந்தேன்.
              

கூட்டத்தில் ஒருத்தரு என்னைப்பாத்துக்கிட்டே வந்தாரு.அவரு மட்டும் இந்த சீட் போட்டவரா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுக்கிட்டேன்.ஏன்னா அவர பாத்தவுடனே தெரிஞ்சுது நல்லா குடிசிருக்காருன்னு,அதுக்குள்ளே பஸ் வேற கிளம்பிடுச்சு,எதிர்பார்த்த(பார்க்காத)மாதிரியே அவருதான் என் பக்கத்தில வந்து ஒக்காந்தாரு.எந்த ஊரு தம்பி?என்றார்.எனக்கு அடிக்காமலே போதை ஏறியது.ஊரை சொன்னேன்.அட எனக்கும் பக்கத்து ஊர்தான் என ஆரமித்து பேச இல்லை உளற ஆரம்பித்தார்.நடுவில் கண்டக்டரிடம் இருபது ரூபாய் கொடுத்து விட்டு நூறு ரூபாய் என பஞ்சாயத்து வேறு.என்னை என்ன குடிசிருக்கேன் ன்னு ஏமாத்தப்பாக்குறியா?இல்ல என்கிட்டே காசு இருக்காதுன்னு நெனைக்கறியா என டவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு நூறு ரூபா கட்டு எடுத்து ஆட்டிக்கொண்டே பாத்தியா?ன்னார்.நான் ஜன்னலோரம் திரும்ப கண்டக்டர் என்னைய கோத்துவிட்டார் .வேண்ணா அவரையே கேட்டுப்பாரு அப்படின்னார்.ஏந்தம்பி நான் எவ்வளவு கொடுத்தேன் நீங்க சொல்லுங்க நான் கேக்குறேன் வேற எவன் சொன்னாலும் கேக்க மாட்டேன்.நான் இருவது ரூவாதாங்க கொடுத்தீங்கன்னேன்.இந்த படிச்ச புள்ள சொல்றதால விடறேன்.யாரையும் ஏமாத்தக்கூடாது தெரியுதா?நீங்களாவது சொல்றீங்கலேன்னு மனசுக்குள் சந்தோசம் பின்னே கம்பெனியில நீயெல்லாம் என்னத்த படிச்சுட்டு வந்தேன்னு கேக்குராங்களே?

                    

பஞ்சாயத்து முடித்து உக்கார்ந்தவர் பணத்தை மேல்பாக்கேட்டில் வைத்தார்.அது வெளியே துருத்திக்கொண்டு இருந்தது.செல்போனை எடுத்து பேச ஆரமித்தார்,அவரது மனைவி போலிருக்கிறது,குடித்திருப்பதை கண்டிபிடித்து திட்டுவதும் இவர் கெஞ்சுவதும் அவரது பேச்சில் தெரிந்தது.பேசி முடித்து செல்போனையும் சட்டைப்பாக்கேட்டிலே வைத்தார் ஏற்கனவே பணம் துருத்திக்கொண்டிருக்க இப்போ பணமும் செல்போனும் கீழே விழும்படி இருந்தது.சொல்லலாமா வேணாமா என மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தி.ஏங்க பணம் விழப்போகுதுன்னு சொன்னேன்.ம்ம்ம்என்னதான் தன்னியடிசாலும் நான் ஸ்டடியா இருப்பேன் ன்னார்.இதுக்குதான் யோசிச்சேன்.சரி நமக்கென்னன்னு மேலே பேசுவதை தவிர்த்து ஜன்னலோரமாய் பார்வையை திருப்பிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன்.அவர் தூங்கி தூங்கி மேலே விழுந்தவண்ணம் இருந்தார்.
பணத்தையும் கவனித்தபாடில்லை.நல்ல வேளையாக எனது ஊர் வந்தது.அப்பாடா என இறங்கிக்கொண்டேன்.


ரெண்டுஊர் தள்ளி கண்டக்டர் தூங்கிக்கொண்டிருந்தவரின் தோளைதட்டி யோவ ஊர் வந்துடுச்சுய்யா!எறங்குன்னு அதட்ட அரக்கப்பரக்க இறங்கினார்.எறங்குகையில் பாக்கெட்டைத்தொட்டவர் அதிர்ந்து அய்யய்யோ என் பணத்தையும் போனையும் காணோம் என அலறினார்!பாக்கேட்டுலதான் வைச்சிருந்தேன் எங்க போச்சுன்னு தெரியலையே,அதை வைச்சுத்தான இந்த மாசம் வூட்டுல பொழப்பு நடத்தணும்னு தெளிந்து புலம்பினார்.யோவ பணத்த வைச்சுக்கிட்டு ஒழுங்கா வராம இப்படி போதைய போட்டுக்கிட்டு வந்தா இப்படிதான்யா நடக்கும்.பக்கத்துல யாரு இருந்தா தெரியுமா?தெரியல்லையா பக்கத்து ஊர் தம்பி பாத்தா படிச்ச புள்ளை மாதிரி இருந்தது.பக்கத்து ஊரும இருக்கிறது ஏன்யா இப்பல்லாம் திருடன்லாம் படிச்சவன் மாதிரித்தான்யா வேசம் போடுறான்.நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும் பொ இப்ப புலம்பி என்ன பண்றது எறங்கு டைம் ஆகுதுன்னு எறக்கிவிட்டுட்டு பஸ் புறப்பட்டது.

                     
 ஐயோ புள்ளைக்கு ஸ்கூலுக்கு,வீட்டுக்கு சாப்பாடுக்கு எல்லாத்துக்கும் வைச்சிருந்த பணம் இப்படிபோச்சே ன்னு கதறினான்.புலம்பியபடி வீட்டைநோக்கி நடையைகட்டினான்.வீட்டுக்குப்போனவுடன் பொண்டாட்டியையும்,குழந்தையும் பார்த்தவுடன் அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.பணமெல்லாம் போச்சுடி கண்ணு,இந்த பாழாப் போன குடியால எல்லாம் போச்சுடி ன்னு புலம்ப ஆரம்மித்தான்.சத்தியமா இனிமே குடிக்க மாட்டேன்டி நம்ம புள்ளை மேல சத்தியம்.


                   
இனி நடந்தது........
அடுத்தநாள் காலை அவனது மனைவியின் செல்போன் அடித்தது.பேசியது கபிலன் தான்.ஊர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக கூறி தான் தான் பணத்தையும் செல்போனையும் எடுத்த்துச்சென்றதாய் கூறி வந்து வாங்கிக்கொல்லுமாறு கூறினான்.போய் பணத்தை வாங்கிக்கொண்டு ஐயா சாமி என் கண்ணை தொறந்துட்டய்யா இனிமே வாழ்க்கையில குடிப்பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன்னு சொன்னான்.
கபிலன் மனதுக்குள் குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு பழமொழி நினைவுக்கு வந்தாலும் ஒரு மனநிறைவுடன் பேருந்துக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.



மேலும் வாசிக்க "குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???"