என் இனிய வலை மக்களே! உங்கள் பாசத்துக்குரிய கோகுல் மனதில் கோகுல் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.இந்த முறை உங்களுக்கு சமர்ப்பிக்க எனது கிராமத்தின் சில பக்கங்களை வண்ணங்களாக என் எண்ணங்களாக எடுத்து வந்திருக்கிறேன். கொங்கு மண்டலத்தின் கடைக்கோடியில் இருக்கும் இந்த கிராமத்தின் ஒரு திருநாளில் எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,வாருங்கள் இந்த கிராமத்தில் திரியும் பறவையாக மாற உங்களையும் அழைக்கிறேன்.படமெடுக்க நண்பனாய் எனது கைப்பேசி காமிராவுடன்,எனது அனுபவமும்,ஒரு கிராமத்தின் கொண்டாட்டமும் உங்கள் பார்வைக்காக இதோ,
நேத்து நைட்டு கே டி.வில பாரதிராஜா படமெல்லாம் எதுவும் பாக்கலைங்க,பொங்கலுக்கு ஊருக்கு போய் வந்ததுல தானா கை அப்படி டைப் அடிக்க ஆரமிச்சுடுச்சு.இது என்னோட கிராமத்துல எனது பொங்கல் அனுபவம் அதாங்க மேட்டரு.சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா?இளையராஜா சரியாதான் பாடியிருக்காரு.சொந்த ஊர் அனுபவம் எல்லாருக்கும் அப்படித்தான்.நான் எப்பவும் பொங்கலின் போது எனது கிராமத்தில் இருக்க தவறியதில்லை.எப்பாடு பட்டாவது(இவ்விடத்தில் எத்தனை பல புளுகு மூட்டைகளை அவிழ்த்தாவது என அர்த்தம் கொள்க)லீவு வாங்கி நான்கைந்து நாள் அங்கே இருப்பது போல் போய்விடுவேன்.
போகியன்று மூச்சுத்திணற வேலைக்கு போய் வந்து அன்னைக்கு இரவு கிளம்பி போனேன்,முதல் மரியாதை க்ளைமாக்சில் ராதா வரும் போது சிவாஜிக்கு சிலிர்ப்பது போல எனக்கும் சிலிர்த்தது(கொஞ்சம் பனி ஜாஸ்தி).போனவுடன் அந்த சூழல் எனக்கு ஓட்ட மறுத்தது என்னை மறந்து போய் விட்டாயே என ஊடல் கொண்ட காதலியைப்போல.கொஞ்ச நேரம் கழித்து உறவுகளின் நலம் விசாரிப்புக்குப்பின் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக எனது நிலையை புரிந்து கொண்டு ஊடல் தீர்ந்து என்னுடன் கலக்க ஆரம்பித்தது.இப்போதும் சிலிர்த்தது ஆனால் இப்போது காரணம் பனி அல்ல.
நீங்கல்லாம் போகிக்கு என்ன எரிச்சிங்கன்னு கேட்டேன்.நம்மக்கிட்ட என்ன இருக்கு எரிக்க அப்படின்னாங்க.அங்கெல்லாம் எதுவும் இல்லன்னாலும் எதையாவது போட்டு எரிப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.இங்க போகிய காப்புக்கட்டு அப்படின்னு சொல்லுவோம்.அதாவது வேப்பிலையுடன் ஆவாரம்பூ,பூளைப்பூ இதெல்லாம் சேத்து கட்டி வீடு,மாட்டு கொட்டகை,வாகனங்கள்,வயல் இங்கெல்லாம் வைப்போம்.அவ்வளவுதான்.
( இது மட்டும் நெட்டில் சுட்டது )
பொங்கல்னா கரும்பு இல்லாமலா?அல்வாவ திருநெல்வேலியிலயும்,மாம்பழத்த சேலத்துலயும்,வாங்குறது தான் சிறப்பு அதுபோல கரும்பு வாங்க கரும்புத்தோட்டத்துக்கே போயாச்சு.நாம காட்டுற கரும்ப வேரோட புடுங்கித்தந்தாங்க.பத்து கரும்ப ரெண்டு பேரு தூக்க முடியல அவ்வளவு கனம்.
கரும்ப தோட்டத்துல வாங்கிட்டு மஞ்சள மட்டும் கடையிலையா வாங்குவோம்?பக்கத்து தோட்டத்துக்கு போய் அதையும் புடுங்கி வந்தாச்சு,இதையெல்லாம் பாக்கும் போது நமக்கு தேவையானத நாமளே விளைய வைச்சு மத்தவங்களுக்கும் கொடுக்குறத விட்டுட்டு,கையெழுத்து போட்டுட்டு நமக்கு மேல ஒரு மேனேஜர்,அவருக்கு ஒரு மேனேஜர் யாரோ முதலாளிக்கு சொல்லும் வேலையை செய்ய போனதை நினைத்து ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி உறுத்தியது.ALL IS WELL.
வாங்கி வந்த கரும்பு மஞ்சளுடன் சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து,கடந்த வருட விளைச்சலுக்கு துணை புரிந்ததற்க்கு நன்றியும் இவ்வருட விளைச்சல் அமோகமாக இருக்க துணைபுரிய வேண்டுதலும் செய்தோம்.பொங்கல் படைச்சு முடிச்சு அக்கம்,பக்கம் உள்ளவங்க எல்லோரும் பொங்கல் பரிமாற்றம் வாழ்த்து பரிமாற்றம் பண்ணிக்கிட்டோம்.பொங்கல் சாப்பிட்டுட்டு ஒரு கரும்பை கையில எடுத்துக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டே ஊர் சுத்த கிளம்பியாச்சு.
கிராமத்துலே சிறப்பே மாட்டுப்பொங்கல் தான் அது எப்படி இருந்ததுன்னு இன்னுமோர் பதிவில பாப்போம்...
Tweet | ||||||
22 comments:
மனசுக்குள்ள தாதான்னு நினப்பு:)
all is well - கொண்டாடி இருக்கன்னு சொல்லு மாப்ள..பொறாமயா இருக்குய்யா ஹிஹி!
உங்ககள் பதிவு கரும்பு போல
இனிக்கிறது! என்னுடய எண்ணங்கள்
என் கிராமத்தை நோக்கிச் சென்றன!
நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
நிஜப் பொங்கலை (கிராமிய )கொண்டாடிய திருப்தி
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
தம்பி படங்கள்லாம் செம அழகுங்க.
பண்டிகைகளின் நிஜமான கொண்டாட்டம் கிராம்ப்புறங்களில்தான் இருக்கு தம்பி
நல்ல என்ஜாய் பனிருகிங்க
நன்றி சொல்ல வந்தேன் ..
பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )
நல்ல பதிவு. ஆனா இதை விட நாங்க கொண்டாடுவோம்.
கொடுத்துவச்சவர்யா.....!
வாங்க பாஸ் வாங்க எப்படி சுகம்?
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா? நிச்சயம் வராது,ஊரில் இருப்பதே மனதுக்கு ஒரு சந்தோசம் தான்.
நல்ல ஒரு பகிர்வு
ஆமா உங்கள் பதிவு எனது டாஸ்போட்டில் வரவேயில்லை நான் பேஸ்புக்கில் பார்த்திட்டுதான் வந்தேன்
ஏங்க! கொங்கு மண்டலத்துக்காரரா நீங்க! அந்த அற்புதமான பூமிய விட்டுட்டா பாண்டிச்சேரிக்கு வந்து இருக்கீங்க! என்னவோ போங்க.
பொங்கலுக்காவது சொர்கத்துக்கு போய் வர முடியுதே, அது வரை பரவாயில்லை.
பொங்கல் கொண்டாட்டம் வெகு அமர்க்களம்.
கிராமத்தில பொங்குகிற பொங்கல்
ஒரு தனி சுவைதான் நண்பரே...
சுவையான கிராமத்துப் பொங்கல்.
ஒரு நிமிஷம் என் சொந்த ஊருக்கு போயிட்டு வந்த தாக்கம்...
அப்பறம் அந்த
pongal padhivu pongalukku vandha padathoda dialogum serthu all is well.
நலமா கோகுல் .இனிப்பான அனுபவம் கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் !
பொங்கல் அனுபவம் புதுமை...ரொம்ப பொறாமை..எங்க பொங்கல் காஸ் ஸ்டவ் ல ...அட்லீஸ்ட் அதாவது கிடைச்சதே... -:)
வித்தியாசமான, உண்மையான பொங்கல் அனுபவங்கள்! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! நன்றி!
வணக்கம் கோகுல் பாஸ்,
தாய் மடிக்குச் சென்று தரிசனம் செய்து, பொங்கலை இன்புறக் கொண்டாடிய நினைவுகளை அழகிய படங்களாக எடுத்து வந்து பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
ஆனால்...கொங்கு மண்டலத்தின் கடைக்கோடிக் கிராமத்தின் பெயரைச் சொல்லவில்லையே தலைவா?
Post a Comment