Saturday, February 11, 2012

கொரங்கு பெடல்


கார்த்தி அஞ்சாவது வரைக்கும் படிச்சது அவங்க ஊரான மங்களபுரத்திலிருந்து  இருந்து ஒரு அஞ்சு கிலோமீட்டர் தூரத்திலிருக்குற ஆயில்பட்டிங்கற ஊர்ல.ஸ்கூலுக்கு போய் வர்றது எல்லாம் ஸ்கூல் வேன்ல தான்.அதுக்கப்பறம் ஆறாவது போகும் போது இந்த ஊரிலே இருக்குற கவர்மெண்ட் ஸ்கூல்ல சேத்து விட்டுட்டாங்க.இந்த ஸ்கூல் அவனோட வீட்டிலிருந்து ஒரு ஒன்னரை கிலோமீட்டர் தான் இருக்கும்.அக்கம் பக்கதிலிருக்குற பசங்க பொண்ணுங்க கூட சேர்ந்து நடந்தே போயிட்டு வந்துடுவான் வீட்டுக்கு.வழியில் அவரவர் எடுத்து வரும் நொறுக்கு தீனிகளின் பரிமாற்றத்துடன் குதூகலப்பேச்சும்,கேலி,கிண்டலுடன் நடை களைப்பு கரைந்திருக்கும்.

ஏழாவது போகும் போது பக்கத்து வீட்டு பொண்ணு பானு சைக்கிள் வாங்கி ஸ்கூலுக்கு போவதைப்பார்த்து நாமளும் சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னு நினைச்சுக்கிட்டான்.அப்ப அவங்க வீட்டில இருந்தது ஒரு பெரிய சைக்கிள்.கால் எட்டாது.பானு கார்த்திக்கை விட கொஞ்சம் உயரமானவ.அதனால அவ ஈஸியா சைக்கிள் கத்துக்கிட்டா. நம்மாளு கொஞ்சம் கூலையா(குள்ளமா) இருப்பான் பெரிய சைக்கிள்ள கொரங்கு பெடல் போட்டு ஒட்டி கத்துக்கிட்டாத்தான் அப்புறம் கம்பி மேல ஒக்காந்து ஓட்ட முடியும்.இதுக்கு நடுவில கீழ விழுந்து முட்டி பேந்து,இன்னும் சைக்கிளுக்கு ஏதாவது ஆகிட்டா அப்பா வேற அடி பின்னிடுவாரே!அதுவுமில்லாம கொரங்கு பெடல் போட்டு சிக்கி ஓட்டுறத பானு பாத்தா அசிங்கமாயிருக்குமே இப்படியெல்லாம் அவன் மனசுக்குள்ள ஓடுச்சு.

                                                                

கார்த்தி பிரண்டு செந்தில் குட்டி சைக்கிள் வைச்சிருந்தான்.அவனுக்கு கோணபுளியாங்கா எல்லாம் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணி டெய்லி ஒரு மணிநேரம் சைக்கிள் பழக சம்மதம் வாங்கிட்டான்.மொத ரெண்டு நாள் செந்தில் பிடிச்சுக்க ஒட்டி பழக ஆரமிச்சான் நாலைஞ்சு நாள்ல அப்படி இப்படின்னு ஓட்ட கத்துக்கிட்டான்.அப்பப்போ வீட்டிலிருந்த பெரிய சைக்கிள்ல யாரும் பாக்காதப்ப கொரங்குபெடலும் போட்டுப்பாத்தான் ஒரு தடவ சைக்கிள்செயின் கடை விழுந்து  இவன் முட்டி பேந்துடுச்சு.அதைக்கூட பாக்காம சைக்கிளுக்கு அதாவது ஆயிடுச்சான்னு பாத்து நைசா கொண்டாந்து வீட்டுல விட்டுட்டான்.வழக்கமா போடுவதை விட கொஞ்சம் கீழே இறக்கி டவுசர் போட்டுக்கிட்டான் காயம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு.

அதுக்கப்புறம் கொரங்குபெடலை கொஞ்ச நாளைக்கு மறந்து செந்தில் சைக்கிள்லயே பழக ஆரமிச்சான்.அப்படியே அவனையே வைச்சு டபுள்சும் வைச்சு ஓட்ட கத்துக்கிட்டான்.அப்படியே அவங்க அப்பாகிட்டையும் ஒட்டிக்காமிச்சு பெரிய சைக்கிளை எடுத்து பழக அனுமதியும் வாங்கிட்டான்.
                        
குட்டி சைக்கிளோட்டி பழகியிருந்தாலும் பெரிய சைக்கிளில் காலைத்தூக்கி மேலே போட முடியவில்லை இரண்டு பெடலிலும் முழுசாக ஒரு ரவுண்டு அழுத்த கால் எட்டவும் இல்லை.மறுபடியும் கொரங்குபெடல்தான்.குட்டி சைக்கிள் நல்லா ஒட்டி கத்துக்கிட்டதால இப்ப கொரங்கு பெடல்ல கீழ விழாம ஓட்ட ஆரமிச்சான்.

அப்பறமா ஒரு நாள் செந்திலுக்கும் இவனுக்கும் ஒரு போட்டி வந்தது.கொரங்கு பெடல் போட்டு ஸ்பீடா ஓட்ட முடியாதுடா அப்படின்னான் செந்தில்.நான் உன்ன விட ஸ்பீடா போய் காட்டுறேன்னு சொல்லி பொட்டிய ஆரமிச்சாங்க கார்த்திதான் முன்னால போனான் ஆனா கொஞ்ச தூரத்துல பானு வர்றத பாத்து வெக்கப்பட்டுகிட்டு சைக்கில நிறுத்திட்டான்.செந்தில் பாத்தியா நான்தான் ஜெயிச்சேன்னு சொன்னான் .கார்த்தி அதுக்கு இல்ல ஏன் சைக்கிள்ல ஸ்போக்ஸ் கம்பி ஒண்ணு கழன்டுகிச்ச்சு அதான் நின்னுட்டேன்னு சொன்னான்.அதெல்லாம் இல்லேன்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்க பானு பக்கத்துல வந்து என்னான்னு கேட்டா செந்தில் விசயத்த சொல்ல ஆரம்பிக்க கார்த்தி தடுத்தான்ஆனா செந்தில் சொல்லிட்டான்.பானு ஸ்போக்ஸ் கம்பியை பாத்துட்டு கம்பி நல்லாத்தான இருக்கு அப்புறம் ஏன் நின்னுட்ட அப்படின்னு கேக்க,கார்த்தி தயங்கி தயங்கி,உன்ன பாத்ததால தான் நின்னுட்டேன் அப்படின்னான்.பானு அதுக்கு ஏன்னு கேட்டா.இல்ல உன் முன்னாடி கொரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட வெக்கமா இருந்துச்சு அதான் அப்படின்னான்.அதுக்கு பானு மக்கு!மக்கு! நானும் மொதல்ல சைக்கிள் கத்துக்கும் போது கொரங்கு பெடல் போட்டுத்தான் கத்துக்கிட்டேன் அப்படின்னா.
அப்போ கார்த்தி ஏதோ பானுவிடம் கேட்க நினைத்து வாயெடுத்து வார்த்தைகளை முழுங்கிக்கொண்டான்.
 __________________________________________________________________________________________________________________________
 கார்த்தி பானுவிடம் என்ன கேட்டிருப்பான்?உங்கள் கற்பனைக்கே.......
சத்தியமாக இதற்கு என்னிடம் பதில் இல்லை.
சில விளக்கங்கள்-கோண புளியாங்கா –கொடுக்காப்புளி
செயின் கடை விழுதல்-கழண்டு விழுதல்
___________________________________________________________________________________________________________________________
கதைக்கு இன்னுமொரு கிளைமாக்ஸ் – பானு அப்படி சொன்னதும் கார்த்தி இப்ப வாடா செந்திலு பாக்கலாம் அப்படின்னு போட்டிய திரும்பவும் ஆரமிச்சாங்க.இப்ப யாரு ஜெயிச்சாங்கன்னு நான் சொல்லனுமா என்ன?
___________________________________________________________________________________________________________________________

14 comments:

சசிகுமார் said... Reply to comment

ஒரே கதைக்கு இரண்டு கிளைமாக்ஸ் சூப்பர்... என்ன சொல்ல வந்திருப்பாங்க???

Yaathoramani.blogspot.com said... Reply to comment

முன்பு ஒரு வீட்டில் இரண்டு சைக்கிள்
வைத்துக் கொள்வதெல்லாம் ஆடம்பரம் என எண்ணி இருந்த காலம்
அப்போது ஆர்வமும் குறைந்த வசதியும் நம்மில் ஏற்படுத்திப் போன
பல ரசிக்கத் தக்க பல விஷயங்களில் இந்தக் குரங்கு பெடலும் ஒன்று
இப்போதுதான் பையன் கேட்ட உடனேயே இரண்டு புறம்
கூடுதல் வீல் வைத்த சைக்கிள் எளிதாகக் கிடைத்து விடுகிறதே
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said... Reply to comment

Tha.ma 2

Rathnavel Natarajan said... Reply to comment

அருமை.
வாழ்த்துகள்.

கூடல் பாலா said... Reply to comment

பெரிய சைக்கிள் பழகும்போது கிடைத்த அனுபவங்களை நினைவுகூர வைத்த கதை ...கிட்டத்தட்ட உடம்பில் எல்லா இடங்களிலும் அடி வாங்கியிருக்கிறேன் அந்நாட்களில் ....

நாய் நக்ஸ் said... Reply to comment

எனக்கு முட்டி பேந்திருகுயா....

நிரூபன் said... Reply to comment

வணக்கம் நண்பா,
எமது பால்ய காலங்களையெல்லாம் மீட்டிப் பார்க்க வைத்திருக்கிறது உங்களின் இச் சிறுகதை!

கார்த்தி பானுவிடம் அப்படீன்னா நீயும் கீழே விழுந்து காலை உடைச்சிருக்கிறியா? அப்படீன்னு கேட்டிருப்பானோ?

பால கணேஷ் said... Reply to comment

பானுகிட்ட அவன் என்ன கேக்க நினைச்சிருப்பான்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு கோகுல்! இன்னொரு கிளைமாக்ஸும் சொன்னது அருமை. பழைய சைக்கிள் கால நினைவுகளை எழுப்பிட்டீங்க...

K.s.s.Rajh said... Reply to comment

////அதுவுமில்லாம கொரங்கு பெடல் போட்டு சிக்கி ஓட்டுறத பானு பாத்தா அசிங்கமாயிருக்குமே இப்படியெல்லாம் அவன் மனசுக்குள்ள ஓடுச்சு.////

ஹி.ஹி.ஹி.ஹி சின்ன வயசு ஞாபகங்களை மீட்டுவிட்டீர்கள்

பானுவிடம் பயபுள்ள என்ன கேட்டு இருக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்

மகேந்திரன் said... Reply to comment

ஒருவீடு இருவாசல் அழகான
அரங்கேற்றம்...
அந்த வயசில குரங்குப்பெடல் போட்டது
மனதுக்குள் நிழற்படமாய் ஓடுது நண்பரே.

எஸ்.எஸ்.பூங்கதிர் said... Reply to comment

அசத்தறிங்க... பாஸ்! தொடரட்டும் உங்கள் அசத்தல்...

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

மறக்கமுடியுமா..

Unknown said... Reply to comment

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே
வந்ததே கோகுல்!
ஆனா அந்த குரங்கு பெடல் பெயர்
காரணம் இன்றும் புரியவுல்லை!

புலவர் சா இராமாநுசம்

துரைடேனியல் said... Reply to comment

கல..கல.. நினைவுகள். என் சிறுவயது ஞாபகங்கள் வந்துவிட்டது.

அப்புறம் கோகுல் சார். தானே புயலுக்கு நிதி திரட்டறது சம்பந்தமாக ஒரு பதிவு போட்டீங்களே. அதபத்தி. என்னோட ஆபீஸ்ல ஒரு நாள் சம்பளத்தை நாங்க மொத்தமா கொடுத்திட்டோம். அதுனாலதான் உங்க கிட்ட பணம் தரல. கொஞ்சம் பண நெருக்கடி. அதுவும் ஒரு காரணம். ஸாரி.