Saturday, July 20, 2013

மயிலானவளுக்கு........,


மயிலானவளுக்கு..............

                     என்ன பண்ணிட்டு இருக்க மயிலு?நான் கேக்குறது உனக்கு கேக்குதா?

                                         இப்படித்தான் இப்போதெல்லாம் நீ என்ன பண்ணிட்டு இருக்க?என்ன நினைச்சிட்டு இருப்ப?னு உன்னைப்பற்றிய நினைவுகளுடனே நேரம் நகர்கிறது.எதிர்பார்த்த பிரிவுதான்,ஆனால் நான் விரும்பாதது நீ விரும்பியது.பின்னே பேறு காலத்தில் தாயாகப்போகும் காலங்களில் தாயின் அரவணைப்பிலிருக்கதானே நினைப்பாய்.நீ உடனிருக்கும்போது அப்போதைய வாழ்க்கைதான் வாழ்ந்தோம்.கடந்து சென்றவைகளைப்பற்றி நினைத்துப்பார்க்க நேரமில்லை இப்போது அதற்கான நேரம்.........


                           நான் ஏன் உன்னை மயிலென்று அழைக்க ஆரம்பித்தேன் என நினைத்துப்பார்க்கிறேன்.உனக்கும் எனக்குமான பரிமாறல்கள் எல்லாமும் ஒரு மாலை நேர மழைக்குப்பின்னான இதமான தேநீரின் முதல் மிடறினைப்போல மெல்ல,மெல்ல அந்த கணத்தினை நோக்கி பயணப்பட துவங்குகிறேன்.



     மணமுடித்து என்னுடன் வருகையில் உன் அப்பா,அம்மாவை அணைத்தழுத பொழுது இல்லாத உணர்ச்சி வளையலணிந்து என் கையழுத்தி போய்டு வரேன் என சொன்ன போது தாயுமான உணர்வளித்தாய்.இங்கேயே இருந்து விடேன் என்ற போது ,"ம்ம்ம்,அஸ்கு ,புஸ்கு எங்க அப்பா அம்மா எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்க,நீயும் கொஞ்ச நாள் படு" என சொல்லி கண்ணால் விடை பெற்று சென்றாய்.


        அன்றொருநாள் பரிசோதனைக்கு மருத்துவமனை போயிருந்தபோது மருத்துவர் வர சற்று நிறையவே தாமதமாக அத்தனை பேர் இருக்க என் தோளில் சாய்ந்து உறங்கிப்போனாய்.ஆனால் அன்று என்னைப்பொறுத்தவரை நீயும் நானும் மட்டும் அங்கே.இவன் எனக்கானவன் என்ற உரிமையில்,திமிருடன் உறங்கிய உன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.காதலில்,
                                                               
தனிமை பிடிக்கும்
தானாய்ப் பேச வைக்கும்
சிந்திக்க வைக்கும்
                                                      சிறகு முளைக்கும்
எனக்கு  முளைத்தது அன்று.



எப்போதாவது கோபமாக இருக்கும் போது உன்னை மயிலுக்கு லு'னாவுக்கு பதிலாக று'னா போட்டு வெடுக்கென்று போடி என்பேன்.அப்போது ஏதும் சொல்லாமல் மகிழ்வோடு பகடி செய்துகொண்டிருக்கையில் கோவமா இருக்கும்போது மயிலுன்னு கூப்பிடாம வேற மாதிரி கூப்பிடுவியே அந்த மாதிரி கூப்பிடு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பாய்.பொய்யாய் கோபித்து உன் ஆசையை நிறைவேற்றுவேன் செல்லமாய் அணைப்பாய்.நினைத்துப்பார்க்கையில்.....
                
உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
                        கனவு காணச் சொல்லும்     

பள்ளிக்காலங்களிலே உன்னை நானும்,என்னை நீயும் அறிவோம்.இறுதி வரை இணைந்தே வாழப்போகிறோம் என அப்போதே அறியோம்.அப்பவே மயிலென்று உன்னை அடையாளப்படுதிக்கொண்டேன் என்னுள்.அந்த சமயத்தில் அதைப்பற்றியெல்லாம் உன்னிடம் சொல்லியிருந்தால் இப்படி இணைந்திருப்போமா என்பது ?யே.அப்போது என்னிடத்திலும் காதலில்லை உன்மேல்,ஆனால் நீயென்றால் கொஞ்சம் சிறப்பு எனக்கு.சேலத்து மாம்பழம் விளைவது அங்கல்ல,ஆனால் அந்த பெயர் மாம்பழத்திற்கு சிறப்பு அதைப்போல் நீ எனக்கு.
எதற்கு இருக்கிறார்கள் நண்பர்கள் இதையெல்லாம் சொன்னால் ஏதாவது கட்டுக்கதை கட்டி முதுகில் டின்னையும் கட்ட வைத்துவிடுவார்கள்.

கல்லூரியில் கேட்கவே தேவையில்லை ஈரை பேனாக்கி பேனை பெரியப்பாவாக்கினார்கள் நண்பர்கள்,ஆம் நமக்குள்ளிருந்த நட்பினை பேசிப்பேசியே காதலாக்கிவிட்டார்கள் காதல் பக்குவமறியாது என்பர்.அதை எனக்கு பொய்யாக்கி காட்டினாய் நீ.இணைந்து வாழத்தான் காதல் அதற்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணு என சர்வ சாதாரணமாக ஒற்றை வார்த்தையில் எனக்கு எல்லாம் புரிய வைத்தாய்.அதுவரை காதல் என்னுள் .........
                      
ஹார்மோன்களைத்
தூண்டிவிட்டு
ஹார்மோனியம் வாசிக்க விட்டு
                        வேடிக்கை பார்த்திருந்தது

 ஹார்மோன்களை அடக்கி,ஹார்மோனிய வாசிப்பை நிறுத்தி சிந்திக்க வைத்தாய்.பின்னொரு நாள் உன் அப்பாவிடம் வந்து என் மயிலை என்கிட்டே குடுத்துடுங்க என உரிமையோடு கேட்ட போது  மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டியபோது நீ என்னைப்பார்த்து புன்னகைத்தபோது 
கவிதைகளாய்  சொல்ல தோன்றியது,உங்கப்பாவைபார்த்ததும் எங்கே யோசிக்க ஆரம்பித்து விடுவாரோ என எண்ணி பிறகு அதையெல்லாம் உன்னிடம் சொல்லிக்காண்பித்தேன்.


'உன்னை எப்ப இருந்து மயிலுன்னு கூப்பிட ஆரம்பிச்சேன்னு உனக்கு தெரியுமான்னு உன்கிட்ட ஒரு முறை(நீ தப்பாதான் சொல்லுவனு தெரிஞ்சே) கேட்டப்போ,எங்க அப்பா ஒத்துக்கிட்டப்பறம் நாம பேசிட்டு இருக்கும்போதுனு சொன்ன.அன்னிக்கு தான் உன்கிட்டயே சொன்னேன்.இது நாம பனிரெண்டாவது படிக்கறப்போவே நான் உனக்கு வைச்ச பேர் அப்படின்னு.அடப்பாவி இப்போத்தான் எனக்கும் நியாபகத்துக்கு வருது என இணைந்தே அந்த தருணத்தை நினைவு கூர்ந்தோம்.


          அது விலங்கியல் பாடவகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு விலங்கினத்தின் அறிவியல் பெயர் சொல்லி அந்த விலங்கினத்தில் பெயரை கேட்டு வந்தார் என் முறை வந்தது பாவோ க்ரிஸ்டேட்ஸ்(Pavo cristatus) இது எந்த உயிரினத்தின் பெயர் என்றார்.இந்தியாவில் இந்த பறவை மிகச்சிறப்பு என குறிப்பு வேறு தந்தார் வகுப்பறையில் அனைவரது தூக்கத்தை கலைத்த பதிலாக காக்கா என்றேன்.நீயும் சிரிக்கிறாயா என பார்த்த போது ஏதோ ஒரு புத்தகத்திலிருந்த மயில் படத்தை காட்டினாய்.இது போதாதா.வேறேதும் காரணமும் வேண்டுமா?

             இதை சொன்னதில் இருந்து எனக்கான செல்லப்பெயரையும்  அந்த நிகழ்விலிருந்தே வைத்தாய் அந்த ஆசிரியர் உன்னைப்போய்  Bos gaurus    -  ன் பெயர் என்ன என்றா கேட்க வேண்டும்,அதற்கு உனக்கு விடை தெரியாமல் என்னைப்பார்க்க,என் நேரம்.......ம்ம்ம்.இதற்கு நான் அந்த பெயரை உனக்கு வைக்காமலே இருந்திருக்கலாம்.

இனி  இப்படித்தான் நீ வரும் வரை,எத்தனை கடிதங்கள் எழுதப்போகிறேனோ?நீயும் இப்படித்தான் எழுதிகொண்டு,நினைதுக்கொண்டிருக்கிறாயா?ஓ!உனக்குத்தான் பகிர்ந்துகொள்ள ஒரு உயிர் இருக்கிறதே.பகிர்ந்து கொள்.நீ என்னென்ன நினைக்கிறாயென
நான் பிறகு கேட்டு தெரிந்துகொள்கிறேன்.அது வரை
                        

ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
                           காத்திருக்கச் சொல்லும்
 உன் காதல்.

ப்ரியமுடன்
கோகுல்.
 

 

24 comments:

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

சேலத்து மாம்பழம் விளைவது அங்கல்ல//

ஏய் நில்லு நில்லு சேலத்து மாம்பழம் விளைவது அங்கில்லையா ? அப்போ வேற எங்கே ?

எனக்கு இது புது செய்தியா இருக்கே ?!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

கல்யாண [[காதல்]] வாழ்கையை சுவாரஸ்யமாக கவிதைகளுடன் சொன்னது, தபு சங்கர் போலவே சுவாரஸ்யமாக இருக்கு...!

ஓஹோ வீட்டம்மா ரெண்டு ஆளாக வரப்போறாங்களா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Reply to comment

கோகுல். மனைவிக்கு அன்பைக் கலந்து எழுதிய காதல் கடிதம் அனுபவித்து எழுதி இருக்கிறாய். சூப்பர் வாழ்த்துக்கள்

கோகுல் said... Reply to comment

@MANO நாஞ்சில் மனோ
சேலம் மாவட்டத்தில் அதிகம் மாம்பலம் விளைவது கிடையாது,தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தான்.முன்பு மூன்றும் ஒரே மாவட்டமாக(சேலம்) இருந்ததால் இன்றும் சேலத்து மாம்பழம்.

கோகுல் said... Reply to comment

@T.N.MURALIDHARAN
நன்றி,நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

/// இணைந்து வாழத்தான் காதல் - அதற்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணு... ///

ரசிக்க வைக்கும் கடிதம்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

r.v.saravanan said... Reply to comment

மணமுடித்து என்னுடன் வருகையில் உன் அப்பா,அம்மாவை அணைத்தழுத பொழுது இல்லாத உணர்ச்சி வளையலணிந்து என் கையழுத்தி போய்டு வரேன் என சொன்ன போது தாயுமான உணர்வளித்தாய்.

அருமை

வெற்றி பெற வாழ்த்துக்கள் கோகுல்

ரூபக் ராம் said... Reply to comment

போட்டியில் வெற்றி பெறவும், புது வரவை விரைவில் தோளில் தழுவவும் வாழ்த்துக்கள் :)

தனிமரம் said... Reply to comment

காதல் கடிதம் அனுபவ்த்தின் மூலம் சிறப்பாக தீட்டியிருக்கின்றீர்கள் மனசைப்பிழிந்துவிட்டீர்கள் போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் !விரைவில் வரும் புதிய உறவுக்கும் ஒரு கடிதம் எழுதுங்கள்:))))

Angel said... Reply to comment

Fantastic!!!!ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க தம்பி .போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் .

Angelin.

கோகுல் said... Reply to comment

@திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி DD

கோகுல் said... Reply to comment

@r.v.saravanan

வாழ்த்துக்கு நன்றி

கோகுல் said... Reply to comment

@ரூபக் ராம்
நன்றி ரூபக்

கோகுல் said... Reply to comment

@தனிமரம்
நிச்சயம் எழுதுவோம்,நன்றி நேசன்

கோகுல் said... Reply to comment

@Cherub Crafts
நன்றி,நன்றி.,

Tamizhmuhil Prakasam said... Reply to comment

மனைவிக்கு அழகானதோர் காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவருக்கும் அன்பு  said... Reply to comment

''ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
காத்திருக்கச் சொல்லும்''

அதுதான் காதல் நினைவலைகளை நிரப்பும் கடிதல் வாழ்த்துக்கள்

சசிகலா said... Reply to comment

உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
கனவு காணச் சொல்லும் ....

தெரியுது தெரியுது உறக்கம் அகன்றது... கவிதை எழுதியது... நல்லா இருக்குங்க.

மாதேவி said... Reply to comment

இனிய காதல்கடிதம். வெற்றிக்கு வாழ்த்துகள்.

VOICE OF INDIAN said... Reply to comment

"அருமை
வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!"

arasan said... Reply to comment

தல ... படிக்கும் போதே மனதுக்குள் ஒவ்வொரு வரியும் பதிந்து விடுகிறது ...
அழகிய சொல்லாடல் தல ... இரட்டை வாழ்த்துக்கள் ....

சீனு said... Reply to comment

உங்கள் மயிலை எண்ணி உருகி உருகி எழுதி இருக்கீங்க கோகுல், விரைவில் அப்பாவாகப் போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்... இந்தக் கடிதத்தை படித்திருந்தால் நிச்சயம் உங்கள் மயில் பெருமகிழ்ச்சி அடைதிருபார்கள்... பிரிவில் அத்தனை காதல்...

ஸ்ரீராம். said... Reply to comment

கணவன் மனைவியுடன் பழைய நாட்களைப் பற்றி காதலுடன் பேசுவதை, பாதி புரிந்தும் பாதி புரியாமலும் ஒட்டுக் கேட்டது போல இருக்கிறது! வாழ்த்துகள்.

Ranjani Narayanan said... Reply to comment

'மயிலு' என்று பெயர் வைத்த தருணத்தை இருவரும் நினைவு கூர்ந்தது மிகவும் இனிமை.

நிஜ வாழ்வில் அப்பாவாகப்போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

போட்டியில் வெல்லவும் வாழ்த்துக்கள்!